சர்வீஸ் சாலையில் மழைநீர் தேக்கம் குண்டும், குழியுமான பள்ளங்களில் கனரக வாகனங்கள் கவிழும்

அபாயம்: அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் ஆம்புலன்ஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடும் அவதியுடன் சென்று வருகின்றன. கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியை ஒட்டி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்கனவே மேம்பால பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது. இதன் அருகில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக தினந்தோறும் சென்று வருகிறது.

 இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  பெய்த மழையால்  இந்த சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 12 பேர் விழுந்து காயமடைந்துள்ளனர். அதோடு அடிக்கடி கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவதால் சுமார் இரண்டு மணி நேரம் வரை இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது சம்பந்தமாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமார், பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு சர்வீஸ் சாலை சீரமைக்க வேண்டும், மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: