சாத்தான்குளம் சம்பவம்..! தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டிருந்தது. சாத்தான்குளம் ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி யை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். காவல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் கிளை தொடர்ந்தது . உன்னால ஒண்ணும் செய்ய முடியாதுடா என்று மாஜிஸ்திரேட்டை ஒருமையில் போலீஸ் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். மேலும் சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்பு படுத்தி பேஸ்புக்கில் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரு காவல்த்துறை அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே ஒருவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் நியமனம்:

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேர் புதிதாக நியமித்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை நியமித்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: