கொரோனாவால் துவண்டுவிடாமல் காரை ‘கரும்பு ஜூஸ்’ கடையாக மாற்றிய டிரைவர்: வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தார்

ஹைதராபாத்: கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்தையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனாவால்  மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்டார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மூடிக் கிடப்பதால் கோடீஸ்வரர்களும் வருமான சுழற்சி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ரயில், விமானம், பஸ் ஆகிய பொது போக்குவரத்தும், ஆட்டோ, கார், கால் டாக்சி சேவையும் முற்றிலும் முடங்கியது. இதையடுத்து தனியார் நிறுவன டிரைவர்கள் மற்றும் வங்கிகளில் கடன் மூலம் கார், ஆட்டோ வாங்கி தொழில் செய்தவர்கள் என அனைவரும் வருமானம் இல்லாமல் நொறுங்கினர்.

கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தினமும் கிடைக்கும் சவாரி மூலம் பிழைப்பை நடத்தி வந்ததால் வறுமை சூழ்ந்த நிலையில் தவித்தனர். வங்கிக்கு தவணை, வீட்டு வாடகை பிரச்னை போன்ற மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இருப்பினும் சிலர் சாமர்த்தியமாக கொரோனா நெருக்கடியை வெல்லும் உத்தியை கடைப்பிடித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத், நரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஹேஸ்வரம் பிரபாகர் (40). இவர் கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக ஐடி கம்பெனி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக, அனைத்து ஊழியர்களும் ‘‘வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்’’ என்ற அடிப்படையில் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் ஐடி ஊழியர்களுக்கு கார் ஓட்டிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், ஐடி நிறுவனங்களில் கார் ஓட்டி வந்த அனைத்து டிரைவர்களின் வருமானம் கேள்விக்குறியாகி விட்டது. டிரைவர் மஹேஸ்வரம் பிரபாகருக்கு, அவர் வைத்திருக்கும் காருக்கு மாதம் ரூ.16 ஆயிரத்து 500 இஎம்ஐ செலுத்த வேண்டும். இத்துடன் குடும்ப செலவும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து தனது காரை கரும்பு ஜூஸ் கடையாக மாற்றினார். அதாவது நரபள்ளி அருகே புறவழி ரிங்ரோடு சாலைக்கு வெளியே இந்த கடையை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்க தளர்வினால் சவாரி வரும் போது காரின் பின் பக்க கதவை மூடிவிட்டு காரை ஓட்டத் தொடங்குகிறார்.

இதுகுறித்து மஹேஸ்வரம் பிரபாகர் கூறுகையில், ``எனக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஊரடங்கினால் என்னுடைய நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. காருக்கு மாதாந்திர தவணை மற்றும் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கு எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இதற்காக கரும்பு ஜூஸ் கடையை தொடங்கினேன். இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். மஹேஸ்வரம் பிரபாகரை போன்று பல கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களில் மாற்றம் செய்து, பழக்கடை முதல் மாஸ்க் விற்பனை வரை செய்து வருகின்றனர். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related Stories: