கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்; சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரிடம் மாஜிஸ்திரேட், மாவட்ட குற்றிவியல் நீதிபதி விசாரணை...!!

கோவில்பட்டி; சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்த விசாரணை தொடங்கியது. ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 19ம் தேதி இரவில் போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணை கைதிகாளாக அழைத்து சென்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அவர்கள்  இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22ம் தேதி இரவில் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தந்தை, மகன் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என புகார் எழுந்ததை அடுத்து  சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்று, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக,  மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடீஷியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்தினார்.  இந்நிலையில், வழக்கு தொடர்பாக  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரிடம் கோவில்பட்டி மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விசாரணை நடத்தும் நீதிபதிகள் காவல் நிலையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க #JusticeForJeyarajAndBennicks என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: