சென்னை: கொரோனா பேரிடரையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்த நன்கொடை விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், அரசின் நிதித்துறை துணை செயலாளரும் முதல்வரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில் பதில்மனு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், கார்பரேட் நிறுவனங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விபரம் அதில் இடம்பெறவுள்ளது. அதே நேரத்தில் அரசின் சேமிப்பு வங்கி கணக்கிற்கு பல்வேறு வகையில் நிதிகள் வருவதால் அதனை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது.
இவை அனைத்தையும் தொகுத்து இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே இது குறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.