சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழும் அபாயம்: நோயாளிகள், டாக்டர்கள் அச்சம்

பாபநாசம்: மெலட்டூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் நோயாளிகள், டாக்டர்கள் அச்சத்தில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா, கண், மகப்பேறு, பல், ஆய்வகம், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. 7 டாக்டர்கள் உட்பட 70 பேருக்கும் மேல் பணியில் உள்ளனர். இங்கு தினம்தோறும் 300 பேர் வரை வந்து சிகிச்சை பெறுகின்றனர். மெலட்டூரை சுற்றியுள்ள நரசிங்கமங்கலம், கோவத்தகுடி, கரம்பை, அன்னப்பன்பேட்டை, திட்டை, பெருமாக்கநல்லூர், வையச்சேரி, அகரமாங்குடி, சுரைக்காவூர், தேவராயன்பேட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

மெலட்டூரை சுற்றி தனியார் மருத்துவமனைகள் இல்லாத நிலையில் இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஏதாவது உடல்நல குறைவென்றால் இந்த ஆரம்ச் சுகாதார நிலையத்துக்கு தான் வர வேண்டும். இல்லையென்றால் பாபநாசம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர் செல்ல வேண்டும். இந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இடத்தை தனியார்கள் ஆக்கிரமிக்க துவங்கி விட்டனர். இந்த ஆரம்ப சுகதார நிலையம் கட்டி 35 ஆண்டுகளுக்கு மேலானதால் ஆங்காங்கே கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது.

சமீபத்தில் கூட இந்த நிலையத்தில் பணியிலிருந்த ஒரு டாக்டர் மீது சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நோயாளிகள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிதாக தரமான முறையில் கட்டிடம் கட்ட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: