சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா.: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்று  சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498-ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில், அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

சேலத்தில் முதலில் ஐந்து பேருக்கு வந்த தொற்று படிப்படியாக உயர்ந்து தற்போது வரை வேகமாக பரவிவருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்ததும், வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சேலத்தில் குவியத் தொடங்கினர்.

இதில் பலரும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்ட சாலைகளில் வராமல், கிராமங்கள் அமைந்துள்ள குறுக்கு சாலைகளில் புகுந்து சேலத்துக்குள் வந்துள்ளனர்.

இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்துள்ளது. அதேநேரம், தளர்வால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டமாக சென்று வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவதை பின்பற்றவில்லை. இதனால் கொரோனா அதிவேகமாக சேலத்தில் பரவி வருகிறது. ஒரு வாரமாக, தினமும் 20 முதல் 70 பேர் வரை, பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஓரே நாளில் 94 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: