கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்கலைக்கழகம், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து : ஹரியானா மாநிலம் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!!

சண்டிகர் : கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகள் திறந்த பின்னர் நடத்த திட்டமிடப்பட்டது. இதனிடையே  ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.அதேசமயம், பள்ளிகளை போல கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் கல்லூர் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெரிவித்த அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.முன்னதாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: