ரூ332 கோடி முறைகேடு வழக்கில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங்குக்கு சிபிஐ சம்மன்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் தலைவர் இபோபி சிங், தனது பதவிக் காலத்தில் கடந்த 2009 முதல் 2017 வரை அம்மாநில மேம்பாட்டு சங்க தலைவராக பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில் சங்கத்தின் ரூ.518 கோடி நிதியில் ரூ.332 கோடிக்கு முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. மணிப்பூரில் 2017க்குப் பிறகு பாஜ ஆட்சி அமைந்ததும் இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி இவ்வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மேம்பாட்டு சங்க நிதி முறைகேடு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் இம்பாலுக்கு விரைந்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு இபோபி சிங் மற்றும் மேம்பாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவர்களான 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இபோபி சிங் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் பாஜ அரசு பெரும்பான்மையை இழந்ததால், ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது. இந்த சூழலில் முன்னாள் காங்கிரஸ் முதல்வருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: