சண்டையில் இது ஒரு புதிய ரகம்; தென் கொரியா மீது துண்டு பிரசுர போர் நடத்த வடகொரியா தீவிரம்: எல்லையில் 3 ஆயிரம் பலூன்கள், 1.2 கோடி நோட்டீஸ் தயார்நிலை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-53ம் ஆண்டு வரை போர் நடந்தபோது, தென் கொரியா, வட கொரியா நாட்டினர் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தி சண்டையிடவில்லை. எல்லையில் பலூன்களில் துண்டு பிரசுரங்களை அனுப்பியும் புதுவிதமாக சண்டையிட்டனர். இது, மக்களின் மனதை பாதித்து,  உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இது,கொரிய நாடுகளின் பாரம்பரிய சண்டையாக இருந்து வருகிறது. இதற்கிடையே, பரம எதிரிகளாக இருந்த வடகொரியாவும், தென் கொரியாவும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பாகின. பின்னர், இனி துண்டு பிரசுர சண்டையில் ஈடுபட வேண்டாம் என 2018ல் ஒப்பந்தமும் செய்து கொண்டன.

இந்நிலையில், வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்ற சிலர், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை விமர்சித்து தென் கொரியா எல்லையில் கடந்த மே மாத இறுதியில் துண்டு பிரசுர பலூன்களை பறக்க விட்டனர். 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் பறந்து வந்ததால் ஆத்திரமடைந்த வடகொரியா, சில நாட்களுக்கு முன்பு, தனது எல்லையில் உள்ள கொரிய தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தது. அதோடு, 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. தென் கொரியாவுக்கு பதிலடி தர வேண்டிய நேரம் வந்தாகி விட்டதாகவும் அறிவித்தது.

தற்போது, வடகொரியாவில் தென் கொரியாவுக்கு எதிராக 1.2 கோடி துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை 3000 பலூன்களில் கட்டி அனுப்பும் முடிவில் வடகொரியா உறுதியாக உள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் உளவியல் மோதல் உருவாகும் நிலை ஏற்படலாம் என்றும், வடகொரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தென் கொரியா மன்றாடி, வலியுறுத்தி உள்ளது.

துண்டு மேட்டரால் குண்டு வெடிக்கும் அபாயம்

1.1950 - 1953 போரில் இருந்து, வடகொரியாவும் தென்கொரியாவும் உலகமே பார்த்திராத இந்த துண்டு பிரசுர சண்டையை போட்டு வருகின்றன.

2.மேலும், 1970ல் இருநாட்டு எல்லைகளிலும் பெரிய பெரிய ஒலிபெருக்கிகளை வைத்தும் இருதரப்பும் கன்னாபின்னா என்று திட்டி தீர்த்த சண்டையும் நடந்தது.

3.சமீபத்தில் தென் கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு அனுப்பப்பட்ட துண்டு பிரசுர பலூன்களில் பழைய பில்கள், இத்துப்போன கம்யூட்டர் பாகங்கள், காகிதங்கள் போன்றவையும் அனுப்பப்பட்டன.

4.அதோடு, துண்டு பிரசுரங்களில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, ‘ரத்தக்களறி பன்றி’ என்று திட்டும் வாசகம் இடம் பெற்றது. வடகொரியாவின் கோபத்தை இது பயங்கரமாக தூண்டியுள்ளது.

5.இப்போது, தென்கொரியாவுக்கு 1.2 கோடி துண்டு பிரசுரங்களை சுமந்து செல்ல உள்ள பலூன்களில், தென்கொரியர்களை தலை தெறிக்க ஓட விடும் வகையில் ‘கப்படிக்கும்’ குப்பைகளையும் வடகொரியா அனுப்ப உள்ளது.

6.கடைசியாக, துண்டு மேட்டரால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் குண்டு சத்தம் கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: