பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி; தொழிலாளர்கள் நலன் கருதி மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மூடல்...!

நெல்லை: கொரோனா பரவல் காரணமாக மகேந்திர கிரியில் அமைந்துள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மூடப்பட்டது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும்  மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் தமிழகம் நேற்று வரை 2-வது இடத்தில் இருந்த நிலையில், இன்று 3-ம் இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு என்ற இடத்தில் மகேந்திரகிரியில் மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இயங்கி வருகிறது. இங்கு செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொருத்தப்படும் கிரயோஜனிக் என்ஜின் சோதனை நடைபெறும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இங்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரோவில் பொறியாளராக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று ஒரு நாள் மட்டும் மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அதிகாரிகள் மற்றும் இஸ்ரோவில் பணிபுரியும் பிற தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய நிர்வாக அலுவலர் சுப்பிரமணியபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: