டெண்டர் விட்டு 5 மாதமாகியும் சாலை அமைக்கப்படவில்லை: கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி சாலை சேதமடைந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி உள்ளது. இங்கு நான்குவழிச்சாலையில் இருந்து ராமசாமிபுரம் வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்ல 1 கி.மீ தூரம் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாகவே  ராமசாமிபுரத்திலிருந்து மில் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இதுதவிர ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ஜெயராம் நகர், கணேஷ்நகர், தேவாடெக்ஸ் காலனி, லெட்சுமி நகர், ராஜீவ்நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் புறநகர் பகுதி மக்கள் நகருக்குள் செல்லாமல் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம், கருவூலகம், பள்ளிகள், வங்கிகள் ஆகிய இடங்களுக்கு விரைவாக வந்து செல்ல இந்த ரோடு பயன்படுகிறது.  

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ளது. டூவீலர்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன. இதனால் இந்த ரோட்டின் வழியாக சென்று வந்தவர்கள் காந்திநகர் திருச்சுழி ரோடு வழியாக அருப்புக்கோட்டை செல்ல வேண்டி உள்ளது. சேதமடைந்த ரோட்டை புதிதாக அமைக்க கோரி பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 750 மீட்டர் தொலைவிற்கு இந்த சாலையை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.17.48 லட்சத்திற்கு டெண்டர் விட்டது. 5 மாதம் ஆகியும் ஒப்பந்ததாரர் இதுவரை  சாலை அமைப்பதற்குரிய எந்தவொரு பணியும் துவங்கவில்லை. பணிகளை விரைவில் துவக்கி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: