எல்லையில் சுகாதார சோதனைச்சாவடி திடீர் அகற்றம்; தமிழகத்துக்குள் தடையின்றி நுழையும் கேரள வாகனங்கள்: கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கம்பம்: தமிழக - கேரள எல்லையில் கம்பம்மெட்டு பகுதியில் இருந்த சுகாதார சோதனைச்சாவடி திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதனால் எந்தவித சோதனையுமின்றி கேரள வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழைவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்ல போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை வழிகள் உள்ளன. இ-பாஸ் மூலம் கேரளா செல்பவர்கள் குமுளி வழியாகவும், சரக்கு வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாகவும் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. கம்பம்மெட்டு வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் கேரளாவுக்குச் சென்று திரும்பின.

இதில் லோயர்கேம்ப் பகுதியில், தமிழக காவல்துறை, சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இங்கு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் கம்பம்மெட்டு வழியாக சரக்கு வாகனங்களில், தமிழகத்துக்கு வாகனங்களில் வருபவர்களை அடிவாரப்பகுதியிலுள்ள, சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் காய்ச்சல் உள்ளிட்ட சோதனை செய்யப்பட்ட பின்பே தமிழக பகுதிக்குள் அனுப்பி வந்தனர். கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் 4 மாதங்களாக செயல்பட்ட வந்த சுகாதாரத்துறை சோதனைச்சாவடி திடீரென்று நேற்று அகற்றப்பட்டது.

அங்கு சுகாதாரத்துறையினருக்காக போடப்பட்டிருந்த டெண்ட், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் டிராக்டரில் எடுத்துச் சென்றனர். தற்போது அங்கு காவல்துறையினர் மட்டுமே வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். திடீரென சுகாதாரத்துறை சோதனைச்சாவடி அகற்றப்பட்டதால் பொதுமக்களிடம் கொரோனா தொற்று பயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மருத்துவ அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கம்பம்மெட்டு மலைச்சாலை சரக்கு வாகனங்கள் செல்லும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே இந்த வழியாக செல்கின்றன.

வாகனங்கள் திரும்ப இந்த சாலை வழியாக வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் குமுளி வழியாகத்தான் வரவேண்டும். அதனால் லோயர்கேம்ப் சோதனைச்சாவடியில் கூடுதல் மருத்துவ பணியாளர்கள் வேண்டும் என்பதால், கம்பம்மெட்டிலிருந்த சுகாதாரத்துறை சோதனைச்சாவடி லோயர்கேம்ப் மருத்துவ முகாமிற்கு மாற்றப்படுகிறது’’ என்றார். அதிகாரிகள் தரப்பில் மறுத்தாலும், கேரள பகுதியில் இருந்து தினந்தோறும், வாகனங்கள் தமிழகத்திற்கு கம்பம்மெட்டு வழியாகவே வருகின்றன. எனவே, மீண்டும் சுகாதாரத்துறை சோதனைச்சாவடி அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: