கீழடி அருகே அகழாய்வில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்கக்காசு கண்டெடுப்பு: செப்புக்காசுகளும் சிக்கின

திருப்புவனம்:  கீழடி அருகே அகரத்தில் நடந்த அகழாய்வில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்கக்காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19 முதல் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடக்கிறது. அகரத்தில் தற்போது வரை 6 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் முதலில் தோண்டப்பட்ட குழியில் 7 அடி ஆழத்தில் தங்கக்காசு ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனுடன் 5 செப்பு காசுகளும் கிடைத்துள்ளன. தங்கக்காசு 300 மில்லி கிராம் எடையும், ஒரு செமீ நீள அகலத்திலும் உள்ளது. தங்கக்காசை காட்டிய தொல்லியல் துறையினர், செப்பு காசுகளை காட்டவில்லை.

தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘‘வீரராயன் பணம் என அழைக்கப்படும் இந்த காசுகள் தென்னிந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருந்துள்ளது. இந்த காசின் ஒரு புறத்தில் 12 புள்ளிகள், 3 கோடுகள் வரையப்பட்டுள்ளன. மற்றொரு புறத்தில் சிங்க முகத்துடன் நாமம் மற்றும் சூரியன் போன்ற அமைப்பு உள்ளது. 17ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த காசு, கீழடி அகழாய்வில் முதன் முறையாக கிடைத்துள்ளது. செப்பு காசுகள் அனைத்தும் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவை’’ என்றனர்.

Related Stories: