மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் காவல்துறையினருக்கு சிறப்பு கொரோனா வார்டு

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காவல்துறையினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. அதனை, காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க சுகாதார துறையினர், வருவாய் துறையினர், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தற்போது கொரோனா சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்கு,   காவல்துறையை சேர்ந்தவர்களுக்காகவே, சிறப்பு கொரோனா பரிசோதனை மையம், தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சுமார் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறையினருக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தை ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனை சிஇஓ சேகர் உள்பட மருத்துவமனை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அவர்களிடம், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

Related Stories: