மணப்பாறையில் சமூக இடைவெளியின்றி ஆதார் மையத்தில் குவியும் பொது மக்கள்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதமாக செயல்படாத ஆதார் மையம் இந்த மாதம் முதல் இயங்குகிறது. இங்கு மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதார் சம்மந்தமாக போட்டோ, செல்போன் எண்,பெயர், பிறந்த தேதி, விலாசம் போன்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பொதுமக்கள் காலை முதலே குவிந்து வருகின்றனர். மேலும், தாலுகா அலுவலகத்தில் தற்போது ஒரு கணினி மட்டுமே செயல்பாட்டில் உள்ளதால், தினசரி 20 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்த டோக்கனை வாங்க சமூக இடைவெளியின்றி முககவசம் அணியாமல் பொதுமக்கள் முண்டியடித்து குவிந்து வருவதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கார்டு மற்றும் சமையல் காஸ் இணைப்புக்கு ஆதார் எண் அவசியம் என்பதால் இந்த அட்டைக்கு போட்டோ எடுக்க அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் ஆதார் மையத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளதால் அதிக நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. பலர் போட்டோ எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதை தவிா்க்க கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி போட்டோ எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: