அதிகரிக்கிறது கொரோனா பரவல் வேகம் சிவகங்கையில் பாதித்தோர் 16; சென்னை ‘ரிட்டர்ன்’ 14

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது. சிவகங்கையை சேர்ந்த 51 வயது ஆண், நாட்டரசன்கோட்டை 43 வயது ஆண், மணமேல்பட்டி 54 வயது பெண், திருப்பத்தூரை சேர்ந்த 33 வயது ஆண், காரைக்குடி 52 வயது, 25 வயது ஆண்கள், 25 வயது பெண், சிவகங்கை அருகே துக்கால் 25 வயது ஆண், ஆத்தூர் 32 வயது ஆண், அரசனிமுத்துப்பட்டி 44 வயது ஆண், இரணையூர் 24 வயது ஆண், கல்லல் அருகே செவரக்கோட்டை 48 வயது ஆண், 46 வயது பெண், கல்லல் 31 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்களாவர். மேலும் இளையான்குடியை சேர்ந்த வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு ஆண்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சிவகங்கை முந்தைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதில் 48 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 59 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இருந்து வரும் நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

திண்டுக்கல்லில் 11

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 218 பேர். இதில் சிகிச்சையில் நலம் பெற்று 157 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 11 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 59 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 45 வயது ஆண், 35 வயது பெண், 18 வயது ஆண் மற்றும் 8 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. நான்கு பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

8 பேருக்கு பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சின்னபேராலியை சேர்ந்த 54 வயது பெண்ணுக்கு கடந்த 11ம் தேதி தொற்று உறுதியானது. அதே குடும்பத்தில் அவரது 68 வயது கணவர், 33 வயது மகள், 15 வயது பேரன், 10 வயது பேத்தி என 4 பேர் என நேற்று ஒரே நாளில் தொற்று உறுதியானது. மேலும் சென்னையில் இருந்த வந்த திருச்சுழி பூலாங்கலைச் சேர்ந்த 36 வயது பெண், அவரின் 17 வயது மகன், சிவகாசி ராஜாதுரை நகரை சேர்ந்த 45 வயது தாய் மற்றும் 25 வயது மகள் என 4 பேரையும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: