தொடர் பைக் திருட்டு: கார் டிரைவர் கைது

ஆவடி: புறநகர் பகுதியில் வீடு, கடை, பார்க் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கும் பைக்குகளை மர்ம நபர்கள் திருடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில், பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படையினர் திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை தனிப்படை போலீசார் ஆவடி அடுத்த கருணாகரச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடங்கினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. மேலும், அவர் பத்திரிகையாளர் என்று காட்டிய அடையாள அட்டை போலி எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் பட்டாபிராம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில், பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெரு சேர்ந்த விக்டர் (எ) நரேஷ் (38). கார் டிரைவர். இவரது சொந்தவூர் திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமம். கடந்த 2 ஆண்டாக பட்டாபிராம் பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 13 பைக்குகளை திருடியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர் மீது செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்டரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: