வேகமெடுக்கும் கொரோனா அதிகாரிகள் மெத்தனத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் அச்சம்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த பிறகு கடந்த மாதம் 7ம் தேதி சென்னை நீங்கலாக தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவை தற்போது கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் தோறும் சானிடைசர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை நிர்வாகம் முறையாக வழங்கவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:கடந்த மாதம் 7ம் தேதி கடைகள் திறக்கப்பட்ட போது சமூக இடைவெளி உள்ளிட்ட எதுவும் கடைபிடிக்கவில்லை. இதனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, 16ம் தேதி மீண்டும் கடைகள் திறக்கப்பட்ட போது டாஸ்மாக் கடைகள் செயல்படுவதற்கான பல்வேறு விதிமுறைகளை அரசு வெளியிட்டது. அதன்படி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிவது, அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துவது, மணிக்கு ஒருமுறை கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை அரசு வெளியிட்டது.

தற்போது, இந்த விதிமுறைகள் எதுவும் டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மதுவாங்க வரும் குடிமகன்களால் கொரோனா வேகமாக பரவும் சூழல் உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளதால் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதேபோல், டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் ஆரம்பத்தில் முகக்கவசமும், சானிடைசர்களும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது இது வழங்கப்படவில்லை. கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெறவில்லை. பாதுகாப்பற்ற சூழலில்தான் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்து அதிகாரிகளும் அவர்களது பணியை சரிவர செய்வதில்லை.  நிர்வாகத்திற்கு இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, மதுரை மண்டலத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே, பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை நிர்வாகமும், அரசும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: