குடிநீர் தட்டுப்பாடு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் இருந்து அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் உள்ளுரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளும் செயல்படாமல் உள்ளன. இதனால் ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் அலைய வேண்டியுள்ளது.

திருப்புவனம் பேரூராட்சி 13வது வார்டு பகுதிகளான இந்திராநகர் மற்றும் ரயில்வே காலனி பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று காலையில் பெண்கள் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக பெண்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் திருப்புவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: