சூதாட்ட கும்பலை பிடித்த போலீசாருக்கு அதிர்ஷ்டம்: கைப்பற்றப்பட்ட பணத்தில் 9 லட்சத்தை போலீசாருக்கு கொடுக்க உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள கிழக்கே தேசம் என்ற இடத்திலுள்ள  ஒரு கிளப்பில் கடந்த 2017ம் ஆண்டு சூதாட்டம் நடைபெறுவதாக அப்போதைய எஸ்.பி. ஜார்ஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. ஜார்ஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த கிளப்பை முற்றுகையிட்ட போலீசார், அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். இதில் ஒரு கும்பல் அங்கு பணம் வைத்து சீட்டாடுவது தெரியவந்தது.  இதையடுத்து அந்த கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து  கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றினர். பணத்தை எண்ணிப் பார்த்தபோது 18,06,280 இருந்தது.

சூதாடியவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கமாலி குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைப்பற்றப்பட்ட பணத்தையும் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சூதாட்டக் கும்பலை கைது செய்த போலீசாருக்கு கைப்பற்றப்பட்ட பணத்திலிருந்து 9 லட்சத்தை சன்மானமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சூதாட்டக் கும்பலை பிடித்த போலீசாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து எர்ணாகுளம் புறநகர் எஸ்.பி. கார்த்திக் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி 9 லட்சத்தை சூதாட்டக் கும்பலை பிடித்த 23 போலீசாருக்கும் சமமாக பங்கிட்டு வழங்கப்படும் என்றார்.

Related Stories: