தேன்கனிக்கோட்டை பகுதியில் 3 பேரை கொன்ற யானை சிக்கியது: மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக கூட்டத்தை பிரிந்து தனியாக சுற்றித்திரிந்த ‘கல் ராஜா’ என்ற ஒற்றை யானை தாக்கியதில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை மேகல கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன்(49) என்பவரும், இந்த யானை தாக்கியதில் உயிரிழந்தார்.  தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வரும் யானையை பிடிக்க வலியுறுத்தி, அவரது சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து, சிம்மசந்திரம் வனப்பகுதிக்கு சென்ற யானையை, வனத்துறையினர் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து சிறப்பு குழுவினரை வரவழைத்து கண்காணித்தனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில், மேகலகவுண்டனூர் பகுதிக்கு மீண்டும் வந்த  ‘கல் ராஜா’ யானைக்கு வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். பின்னர் கயிற்றால் கட்டி கிரேன் மூலம் பிரத்யேக லாரியில் ஏற்றி சத்தியமங்கலத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே அங்கு கல்ராஜாவை விடக்கூடாது என அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: