ஆம்பூர் வனச்சரகத்தில் முடங்கிக்கிடக்கும் கிராம வன குழுக்கள்

ஆம்பூர்: தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகள் பகுதிகளில் வனவிலங்குகள், பறவைகளை வேட்டையாடுவது, கள்ளச்சாராயம், மணல் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்கள், மரங்களை வெட்டுதல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிசெல்வது போன்றவற்றை தவிர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் கிராம வனக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. மேற்கண்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழ்பவர்களுக்கு இந்த  குழுக்கள் மூலம் கடனுதவி வழங்கப்படுகின்றன. அதேபோல் கிராமங்களை ஒட்டி உள்ள நிலப்பகுதிகளில் மரங்கள் வளர்ப்பில் அக்கறை காட்டுபவர்களை கண்டறிந்து கடனுதவி வழங்கி வருகிறது.

அதன்படி ஆம்பூர் வனச்சரகத்தில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் கிராமங்களில் 15க்கும் மேற்பட்ட கிராம வனகுழுக்கள்  உள்ளன. இக்குழுக்களில், செயற்குழு உறுப்பினர்களையும் தலைவரை தேர்வு ெசய்யும் தேர்தல் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் இதுவரை புதிய தேர்தல் நடத்தாமல் பழைய நிர்வாகிகளை கொண்டு கிராம வனக்குழுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த கிராம வனக் குழுக்கள் இப்போது முற்றிலும் செயலிழந்த நிலையில் உள்ளதாகவும், கிராம வனக்குழுக்களில் கடனுதவி வழங்குவதில் முறைகேடு,

வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்துவதில் முறைகேடு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் உறுப்பினர்கள் சேர்க்கை, புதுப்பித்தல், கூட்டங்கள் நடத்தாமல், மாதாமாதம் நடப்பதாக பதிவேடுகளை பொய்யாக தயாரிப்பதாக  பொதுமக்கள்  குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர்,  கிராம வனக்குழுக்கள் மீண்டும் புத்துயிர் பெறவும், முறையாக செயல்படவும், கிராம வனக்குழுக்களின் சார்பில் கடன் உதவிகள் வழங்குவது அதை முறையாக வசூலித்து வங்கியில் செலுத்தவும் புதிய வனக்குழுவினரை நியமித்து, கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், வனஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: