கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு தடை: சீன கால்பந்து சங்கம் நடவடிக்கை

ஷாங்காய்: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மது அருந்துவதற்காக வெளியில் சென்ற 6 கால்பந்து வீரர்களுக்கு, சீன கால்பந்து சங்கம் 6 மாதம் விளையாடத் தடை விதித்துள்ளது.சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் யு-19 கால்பந்து அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பீதி காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இருந்தும், வீரர்களில் சிலர் மே 30ம் தேதி இரவு ரகசியமாக மையத்தை விட்டு வெளியேறி உள்ளனர். மது குடிப்பதற்காக அப்படிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அம்பலமானதால் அதிர்ந்து போன நிர்வாகிகள், கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக அந்த வீரர்களுக்கு அபராதம் விதித்ததுடன் சுய விமர்சனக் கட்டுரை எழுத வைத்துள்ளனர். அதன் மூலம் வீரர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்துகொள்ள முடியும் என்று அணி நிர்வாகம்  கூறியுள்ளது. ஆனால், அதில் திருப்தி அடையாத சீன கால்பந்து சங்கம்,  விதிகளை மீறி பயிற்சி மையத்தில் இருந்து வெளியில் சென்று வந்த 6 வீரர்களையும், 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த யு-19 அணி வீரர்கள், 2024ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தயாராகி வந்த நிலையில், அவர்களின் பொறுப்பற்ற செயலால் கடுப்பான சீன கால்பந்து சங்கம் இப்படி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: