இலவச ஆலோசனை மையங்கள் அமையுங்க; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக...உச்சநீதிமன்றம் உத்தரவு...!

டெல்லி: ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 5-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அன்றைய தினம், அனைத்து மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்தது. அதுமட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களும் புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் தேவையான உதவியை செய்து தர வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்வதன் மூலம் அனைவரையும் அடையாளம் கண்டறிய வேண்டும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பது பற்றிய திட்டத்தை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: