உள்ளூர் மக்களுக்கே சிகிச்சை என்பதா? டெல்லி அரசு உத்தரவை மாற்றினார் கவர்னர்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் உள்ளூர் மக்களுக்கே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அம்மாநில கவர்னர் மாற்றி உள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நோய் பாதிப்பு எண்ணிக்கை ஞாயிறன்று 28,936 என உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் கூறுகையில், ‘‘டெல்லியில் நோய் பரவல் விகிதம் 14 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதன்படி, தற்போதைய நிலையில் டெல்லியில் அடுத்த இரண்டு வாரங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 56,000ஐ தொடும் என நாங்கள் அமைத்த நிபுணர் குழு மதிப்பீடு செய்துள்ளது.

டெல்லியிலுள்ள மருத்துவமனை படுக்கை வசதிகள் அனைத்தும் டெல்லிவாழ் மக்களுக்கு மட்டுமே என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது’’ என்றார்.அரசின் இம்முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படு்தியது. இந்நிலையில், டெல்லி மாநில அரசின் உத்தரவை அம்மாநில கவர்னர் அனில் பைஜால் மாற்றி உள்ளார். இதன்படி டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் யார் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம் என்று கவர்னர் அலுவகம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகி உள்ளது.

Related Stories: