ஜூன் 15-ல் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசு அறிவிப்பிற்கு தொடரும் எதிர்ப்புகள்; மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கருத்து

சென்னை: 3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை  விசாரித்த சென்னை  நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பல பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை;

மு.க.ஸ்டாலின்

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலுங்கானா அரசு காட்டும் வழியையாவது முதல்வர் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன்

தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல 10 ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தேர்வுத்துறை இணை இயக்குநரே கொரோனா பாதிப்புக்கு ஆளான பிறகும் அரசு விடாப்பிடியாக நிற்கிறது. கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று உயர்நீதிமன்றத்தில் சொல்லும் தமிழக அரசுக்கு, மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களின் உயிரைப் பற்றி கவலையில்லையா? கொரோனா விவகாரத்தில் நிர்வாகத் திறனில்லாமல் ஆரம்பம் முதலே தவறு மேல் தவறுகளைச் செய்து நோயைக் கட்டுப்படுவதில் தோற்றுப்போய் நிற்கிறது அரசு. இவ்வளவு ஆபத்திற்கு இடையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி இன்னொரு மோசமான தவறைச் செய்து பெரும் பழிக்கு ஆளாகிவிடக்கூடாது எனவும் கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

3650 நோய்த்தொற்றுகளுடன் கொரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் போது, 33229 தொற்றுகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கும் தமிழகமும் அதை செய்வது தானே மக்கள் நலன் சார்ந்த, அறிவார்ந்த செயலாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது காலமறிந்து,  மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட பாராட்டத்தக்க முடிவு. தமிழக அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்று நம்புவோம் எனவும் கூறியுள்ளார்.

சரத்குமார்

10 -ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

கனிமொழி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நடத்த துடிக்கும் அரசுக்கு கேள்விகளால் குட்டு வைத்துள்ளது உயர்நீதிமன்றம். மாணவர்கள் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது என்ற, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கேள்விகளைதான் நீதிமன்றம் கேட்டுள்ளது.

Related Stories: