ஊரடங்கு தளர்ந்ததால் உற்சாகம் சுத்தமல்லி அணைக்கட்டில் பொதுமக்கள் ஆனந்த குளியல்

பேட்டை: நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள சுத்தமல்லி அணைக்கட்டில் ஊரடங்கு தளர்ந்த நிலையில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்தனர். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி தமிழகத்திலே உற்பத்தியாகி தமிழக கடலில் கலக்கும் சிறப்புமிக்கது. பண்டைய அரசர்களின் சீர்மிகு ஆற்றலால் உருவாக்கப்பட்ட 6 வது அணைக்கட்டு நெல்லை சுத்தமல்லி அணைக்கட்டாகும். பல்வேறு தீர்த்தக்கட்டங்களை உள்ளடக்கிய தாமிரபரணி தண்ணீர் தாமிரம் உள்ளிட்ட பல்வேறு மினரல்களை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் தீர்த்தமாகும். ஆற்றின் இருமருங்கிலும் காணப்படும் நாணல்களை அரவணைத்தோடும் தாமிரபரணி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

நாணல் பல்வேறு விஷத்தன்மைகளை முறியடிக்கும் சக்தி வாய்ந்தது. தவிர பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கையும் தாங்கி நிமிர்ந்து நிற்கும் தன்மை கொண்டது. கோவில் கொடிமரங்கள் கோபுர கலசங்கள் மற்றும் வழிபாடு நிகழ்வுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் நாணல் தாமிரபரணியில் பரவி கிடக்கிறது. இந்த நாணலை தழுவி வரும் தண்ணீர் மிகவும் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான குடிநீராக மாறி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் தாகம் தீர்க்கும் தாயாய் விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளை, தொழிற்சாலை கழிவுகள் கலந்ததால் தண்ணீரின் தரம் கேலிக்கூத்தானது.

தற்சமயம் உலகையே புரட்டி போட்ட கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைவரும் வீட்டிற்க்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆற்றில் கலக்கும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டதால் தாமிரபரணி உற்பத்தியாகும் இடம் துவங்கி புன்னக்காயல் வரை தூய்மையான நதியை காணமுடிந்தது. ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் சற்றே மன அழுத்தத்தை போக்கிட ஆற்றங்கரைகளை தேட துவங்கி வருகின்றனர்.

ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் சமூக இடைவெளியுடன் குளிக்க மக்கள் துவங்கியுள்ளனர். அணைக்கட்டு பகுதியில் கரைபுரண்டோடும் தண்ணீரில் நீர் வீழ்ச்சி போல் கொட்டும் இடத்தில் மக்கள் சமூக இடைவெளியுடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர். ஆண்டுகள் பல கடந்து கொரோனா பாதிப்பால் தூய்மையடைந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது புத்துணர்வு தந்ததாக கருதினர். இதே நிலை தொடருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

தித்திப்பான தண்ணீரை எடுத்து செல்லும் மக்கள்

கொரோனா பாதிப்பால் சுத்திகரிக்கப்பட்ட தாமிரபரணி கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.இதனால் சுத்தமான குடிநீரை கைகளில் வாறி குடிக்கும் மக்கள் அதனை பாட்டில்கள் மற்றும் குடங்களில் ஆர்வமுடன் எடுத்து செல்கின்றனர். தித்திக்கும் தண்ணீர் மேலும் மாசுபடாமல் காத்திட அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: