விதிகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட், பழக்கடைக்கு சீல்

பெரம்பூர்: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட நிபந்தனைகளுடன் அரசு அனுதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கடைகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது, ஒரு கடைக்குள் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும், அவர்கள் பொருள் வாங்கிவிட்டு வெளியே வந்தால் மட்டுமே அடுத்த நபர் செல்ல வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிமுறைகளை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் கூட்ட நெரிசலாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், வடசென்னை பகுதிகளில் இதுபோன்ற விதிமீறல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன வசதியுடன் செயல்படுவதுடன், அதிகப்படியான நபர்களை கடைக்குள் அனுமதிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், மண்டல உதவி வருவாய் அலுவலர் சுரேஷ், வரி மதிப்பீட்டாளர் கோபி, உரிமம் ஆய்வாளர் ஜோசப் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, விதிமீறி செயல்பட்டது தெரிந்தது. உடனே, அந்த சூப்பர் மார்க்கெட்டை மூடி சீல் வைத்தனர். அதே பகுதியில் உள்ள பிரபல பழக்கடையும் குளிர்சாதன வசதியுடன், அதிகமான வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டது தெரியவந்ததால், அந்த கடையையும் மூடி சீல் வைத்தனர்.

Related Stories: