தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்: ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஜூன் 8 முதல் ஓட்டல்களை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஓட்டல்கள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஓட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டுதலயைும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படும் ஓட்டல்களில் அதிக செலவினங்கள் இருப்பதால் ஓட்டல்களில் உணவக கட்டணங்கள் உயரும் என்ற செய்தி சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் ஹோட்டல்கள் திறக்கப்படும் நிலையில் அனைத்து ஓட்டல்களிலும் பழைய கட்டணமே தொடரும் என்றும் ஓட்டல்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதுநாள் வரை பார்சல்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் உணவகங்களிலும் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று விளக்கமளித்தனர்.

மேலும், குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் உனவகங்கள் திறக்கப்படும்; நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்படாது எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஓட்டல் கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தமிழக அரசின் வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க அதிக செலவுகள் ஆகும் என்பதாலும் ஓட்டல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் வெளியூருக்கு சென்றுவிட்டதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதன் காரணமாக ஓட்டல்களில் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: