தர்மபுரி நகரில் நாவல் பழம் கிலோ ரூ.250க்கு விற்பனை

தர்மபுரி: நாவல்பழம் சீசன் துவங்கியதையடுத்து தர்மபுரியில் ஒரு கிலோ ₹250க்கு விற்பனையானது. மருத்துவ குணம் மிக்க பழம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவை மிகுந்த பழங்களில் ஒன்றான நாவல் பழம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் நாவல் பழ சீசன் துவங்குகிறது. இந்தாண்டு கடந்த 2 நாட்களாக தர்மபுரி மார்க்கெட்டிற்கு நாவல் பழங்கள் விற்பனைக்கு அதிகம் வந்துள்ளன.

ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து தினமும் 1 டன் பழங்கள் தர்மபுரிக்கு வர ஆரம்பித்துள்ளது. கடந்தாண்டு கிலோ ₹200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  நடப்பாண்டில் ₹250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இம்மாத இறுதியில் வரத்து அதிகரிக்கும். அதன்பின்னரே விலை குறைய ஆரம்பிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.  நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. நாவல் பழ கொட்டையை அரைத்து பவுடராக்கியும் சர்க்கரை நோயாளிகள் மருந்தாக பயன்படுத்துகின்றனர். மருத்துவ குணங்கள் இருப்பதால், தர்மபுரி நகரில் தள்ளுவண்டிகளில் நாவல் பழ விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

Related Stories: