அருப்புக்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்படாத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்: கலங்கலாக வரும் தண்ணீரால் பொதுமக்கள் அதிருப்தி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்படாத மேல்நிலை தொட்டிகளால் குடிநீர் கலங்களாக வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  குடிநீர் ஏற்றுவதற்காக நகராட்சி அலுவலகம், திருச்சுழி ரோடு, கரும்புலி வீரப்பன் பார்க், நேதாஜி ரோடு, ஜவஹர் சங்கம், அஜீஸ்நகர், டவுண் காவல்நிலையம் பின்புறம், மதுரை ரோடு, காந்தி மைதானம் அந்திக்கடை பொட்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertising
Advertising

 குடிநீர் தொட்டிகளை மாதம் ஒருமுறை பராமரிப்பு செய்ய வேண்டும். தொட்டியில் உள்ள மண், கழிவுகளை அப்புறப்படுத்தி தொட்டியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்து பின்னர் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் நகரில் உள்ள 9க்கும் மேற்பட்ட  மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்து மாதக்கணக்கில் ஆகிறது. தொட்டியில் உள்ள குடிநீரில் மண் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யும் போது மண்ணோடு சேர்ந்து தண்ணீர் வருகிறது. தண்ணீர் கலங்கலாகவும், அலர் நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கரும்புலி வீரப்பன் பார்க்கில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் படிக்கட்டுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய முடியவில்லை என ஊழியர்கள் கூறுகின்றனர்.  ஆனால் மற்ற தொட்டிகளையும் சுத்தம் செய்வதில்லை. தொட்டியை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் அதிக அளவுக்கு பிளிச்சிங் பவுடரை கலந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு பிளிச்சிங் பவுடர் நாற்றம் எடுப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: