கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கும்பல் கைவரிசை குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்

*  சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படுமா?

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கடைசி எல்லை பகுதி வரை அடர்ந்த மரங்களுடன் காடுகள் உள்ளன. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதி என்பதால் உலக பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ இதனை பட்டியலிட்டுள்ளது. அரிய வகை விலங்குகள் மற்றும்  பறவைகளும் உள்ளன. வனங்களில் வாழ்கின்ற பெரிய மரங்களான தேக்கு, ஈட்டி, சந்தனம், வெண்தேக்கு, மருது, கருமருது, தாணி, கடம்பு, மாஞ்சியம், ஆயினி, பலா ஆகிய மரங்கள் உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகமே அதிர்ச்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கின்ற சூழலில் குமரி மாவட்ட வனக்கொள்ளையர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த மரங்களை கொள்ளையடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடையுத்தரவு, வாகனப் போக்குவரத்து இல்லாமை உள்ளிட்ட சூழல்களை பயன்படுத்தி கோடிக்கணக்கில் மதிப்பிலான   பெரிய மரங்கள் வனங்களில் சட்ட விரோதமாக வெட்டி இரவு பகலாக கொள்ளையடிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு வேளையில் மரங்களை வெட்டி கடத்தும் நாசகார வன அழிப்பு வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றது என்று சூழியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தின் பகுதியில் உள்ள மரங்களை வெட்டி, இரவில் படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து டெம்போக்களில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கனமான தடிகளை ஏற்றுவதற்கே காயல்கரை, வளையாந்தூக்கி, கடம்பமூடு ஆகிய பேச்சிப்பாறையை ஒட்டிய பகுதிகளில் ஆட்கள் உள்ளனர்.

வெட்டிய தடிகளின் அடிப்பக்கத்திலும் தரையில் மீதமுள்ள பகுதிகளிலும் சீனியை வைத்து தீயால் எரித்துவிடும் வழக்கம் இருக்கிறது. இது தடி கடத்தலில் ஈடுபடும் கும்பலின் கைவரிசைகளில் ஒன்றாகும். அவ்வாறு சீனியை வைத்து எரிப்பதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான மரங்கள் என்ற தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. வெட்டிய பெரிய மரங்களின் அடிப்பகுதிகளை தூக்கமுடியாவிட்டாலும், கடத்தும்போது பொழுது விடிந்துவிட்டாலும், தடிகளின் மேல்பகுதியை சீவி தோல் பகுதிகளை அகற்றி உடைத்து விட்டு விட்டுச் செல்வது வழக்கமாம். இவ்வாறு செல்வதால் அந்த மரங்கள் சில நாட்களில் பழமையான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். எப்போதேனும் அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் அதனை கண்டறிய இயலாது. வெட்டிய தடிகளை மலையோர பகுதிகளில் உள்ள சில மர அறுவை நிலையங்களில் வைத்து உடனே பலகையாக அறுத்து விடுகிறார்கள் வன அழிப்பில் வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவது அவ்வப்போது அம்பலமாகி வருகிறது. தீவிர கண்காணிப்பில் இருக்கின்ற 15 செக்போஸ்ட்களில் சில செக்போஸ்ட்களைத் தாண்டியே மரங்கள் கடத்தப்பட வேண்டும். செக்போஸ்ட்களை எளிதாக எந்தவித பிரச்னையும், சிரமமும் இல்லாமல் மரத்தடிகள் எப்படி கடந்துவருகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக வனத்துறையின் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு வந்தவர்கள் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை நேரடியாக கண்டறிந்துள்ளனர். சில காலம் வன அதிகாரி பணியிடம் மாவட்டத்தில் காலியாக இருந்த வேளையில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மரங்களை வெட்டுவதற்கு பாஸ் வழங்கிவிட்டு கூடுதல் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மர துண்டுகள் அறுவை ஆலைகளில் இருந்து மரங்கள் மீட்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மரங்கள் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளை பலப்படுத்துவதுடன் உயர் அதிகாரிகள் அடிக்கடி விசாரணை மேற்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

2 அதிகாரிகள் சஸ்பென்ட்

பல தில்லுமுல்லுகள் செய்ததாக ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு வனஅதிகாரி ஓய்வுபெறும் நாளுக்கு முந்தைய  நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்டத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்த இன்னொரு அதிகாரி கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெறவேண்டியவர்  அம்மாதமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  மாவட்ட வனத்துறையில் பணிபுரியும் பல அதிகாரிகள் மீது 17-ஏ, 17-பி ஆகிய துறை சார்ந்த சட்ட நடவடிக்கைகள் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. இதில் அதிகாரிகள்  நடத்திய சோதனையில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டுள்ளதற்கு உரிய  விளக்கம் அளிக்காத நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: