தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஜெ.அன்பழகன் விரைவில் நலம் அடைவார்

சென்னை: ஜெ.அன்பழகன் விரைந்து நலம் அடைவார்; அரும்பணி ஆற்றுவார் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனிடம் தான். ஒன்றிணைவோம் வா செயல்பாடுகளுக்காக சென்னையின் பல பகுதிகளுக்கு நான் நேரில் சென்று உதவிகள் வழங்கிய நிலையில், தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளில் என்னைச் சிரமப்படுத்தக்கூடாது என்ற கவனத்துடன், தன்னையே முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் ஜெ.அன்பழகன். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர் என்பதால், அதிக அலைச்சல் கூடாது என்பதை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். கலைஞரின் நம்பிக்கைக்குரிய செயல்வீரராக விளங்கி, மிசா சிறைக்கொடுமைகளை எதிர் கொண்ட பழக்கடை ஜெயராமனின் புதல்வர். தந்தை எட்டடி என்றால், தனயன் பதினாறடி என்ன, அதற்கு மேலும் பாயக்கூடியவர்.

தற்போது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்பில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார். அவருடைய உடல்நலன் குறித்து டாக்டர் இளங்குமரனும், ஜெகத்ரட்சகன் எம்.பியும் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். 80 விழுக்காட்டிற்கு மேல் செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையினால் வெள்ளி காலையில் 45 விழுக்காடு அளவிற்குச் செயற்கை சுவாசம் என்கிற மெலிதான முன்னேற்ற நிலை ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அயராத உழைப்பும் அக்கறையும் சிகிச்சை முறையும் நிச்சயமாக ஜெ.அன்பழகனை முழுமையாக நலன் பெறச் செய்து, கொரோனாவிலிருந்து மீண்டெழுந்து வந்து நம்முடன் முன்பு போல பழகிப் பேசி பணிகளைக் கவனிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் முக்கியமானது. அதற்கு உடல்நலனைப் பாதுகாத்திட வேண்டும். நோய்த் தொற்று காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்தினரின் நலனையும் மனதில் கொள்ளுங்கள். உடல் நலன் பேணுங்கள். மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காத போராளியான சகோதரர் ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: