வேலூர் மத்திய சிறையில் வாழைத்தோட்டம், மாட்டுத்தீவன பயிர்கள் அமைக்கும் பணியில் கைதிகள் தீவிரம்: தண்ணீரின்றி கருகிபோன ரோஜா செடிகள்

வேலூர்:  வேலூர் மத்திய சிறையில் வாழைத்தோட்டம், மாட்டுத்தீவனம் அமைக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தண்ணீரின்றி ரோஜா செடிகள் கருகிப்போனது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லும் கைதிகள், தண்டனை காலம் முடிந்து, வெளியே செல்லும் போதும், சுயத்தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சிறைக்குள் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் சிறைக்குள் கைதிகள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறை நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது. வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கர்களாக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில் வேலூர் சிறைகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலை ₹2.64 கோடியில் அமைக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறும் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஜா தோட்டம் அமைப்பதற்காக 350க்கும் மேற்பட்ட ேராஜா செடிகள் சோதனை முறையில் வளர்க்கப்பட்டது. நன்றாக வளர்ந்த ரோஜா செடியில் மலர்கள் பூத்து குலுங்கின. இதையடுத்து சிறை வளாகத்தை சுற்றியுள்ள ஒரு ஏக்கரில் ரோஜா தோட்டம் அமைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் விவசாயி நிலங்களுக்கு போதுமான அளவு தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது தண்ணீரின்றி ரோஜா செடிகள் எல்லாம் கருகி போனது. இந்நிலையில், எதிர் வரும் நாட்களில் பெய்யும் மழையால், போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதால், வேலூர் சிறையை சுற்றியுள்ள இடங்களில் வாழைத்தோட்டம் மற்றும் சிறையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவனப்பயிர்கள் வளர்ப்பதற்கான பணியில் கைதிகள் ஈடுபட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: