சமூக இடைவெளி காற்றில் பறந்தது; திருச்செந்தூரில் பஸ்களில் நின்று கொண்டு பயணிக்கும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்பவர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் சென்னையை தவிர்த்து மண்டலம் வாரியாக 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மண்டலத்தை பொறுத்தவரை நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊரடங்கிற்கு முன்னர் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது குறைந்த எண்ணிக்கையில் 4 பஸ்கள் மட்டுமே திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. பஸ்கள் இயக்கப்பட்ட முதல் நாள் (1ம்தேதி) அன்று குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் 2, 3ம் நாளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்தனர். கொரோனா அச்சமின்றி வழக்கம்போல் 3 பேர் சீட்டில் மூவரும், இருவர் சீட்டில் 2 பேரும் அமர்ந்து பயணம் செய்தனர்.

இவை தவிர பெரும்பாலானோர் நின்றும் கொண்டும் நெல்லை வரை பயணம் செய்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஸ்களில் சமூக இடைவெளியின்றி நின்று கொண்டு பயணம் செய்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: