அதிகாரத்தின்படி, ராஜினாமா கடிதம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்...மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!

சென்னை: திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) கடந்த மார்ச் 7ம் தேதி காலமானார். 1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு மார்ச் 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவித்தார்.

இதற்கிடையே, கடந்த 15ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விருப்புவதாகவும், எனவே அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, மார்ச் 29ம் தேதி அன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கையில், கொடிய நோயான கரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>