சொந்த ஊருக்கு படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள் ஆட்டோ லூம்ஸ் இயக்க ஆளில்லை 40 சதவீதம் சரிந்தது ஜவுளி உற்பத்தி: கலக்கத்தில் உற்பத்தியாளர்கள்

சேலம்: வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆட்டோ லூம்ஸ் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 முதல் 40 சதவீதம் ஜவுளி உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர், விருதுநகர், கரூர் உள்பட பத்து மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விசைத்தறி கூடங்களில் சாதாரண தறிகளும், ஆட்டோ லூம்ஸ் வகை (தானியங்கி)  தறிகளும் உள்ளன. இந்த பகுதிகளில் ஆட்டோ லூம்சில் ஏற்றுமதி ரகமான காட்டன் ஜவுளிகள், சாதாரண தறிகளில் ஜமுக்காளம், லுங்கி, டவல், கேரளா வேஷ்டி, சேலை, காட்டன் வேஷ்டி உள்பட பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் வெளி நாடுகள், மாநிலங்களுக்கும், இதை தவிர உள்ளூர் பகுதிகளுக்கும் செல்கின்றன.

Advertising
Advertising

ஜவுளி உற்பத்தி மூலம் ஒரு கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. கடந்த காலங்களில் விசைத்தறி தொழிலில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டாக ஆட்டோ லூம்ஸ் என்ற தறிகள் பிரபலமாகி வருகிறது. சாதாரண தறிகளை விட, ஆட்ேடா லூம்ஸ் தறிகள் பத்து மடங்குக்கு மேல் உற்பத்தி தருகின்றன. இதுபோன்ற தறிகளை இயக்க வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களே கை தேர்ந்தவர்கள். இதனால் ஆட்ேடா லூம்ஸ் விசைத்தறி கூடங்களில் பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களே உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமலும், வருமானமின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில்தற்போது, விசைத்தறி கூடங்கள் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் வட மாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர், அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ஆட்டோ லூம்ஸ் இயக்க ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், நங்கவள்ளி, இடங்கணசாலை, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, குமாரமங்கலம், வெண்ணந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விசைத்தறி கூடங்களில் சாதாரண தறிகளை இயக்க உள்ளூர் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் ஆட்டோ லூம்ஸ் வகை தறிகளை இயக்குபவர்களில் 70 சதவீதம் பேர் வட மாநில தொழிலாளர்கள் தான். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தங்கி வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்களில் பலர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக ஆட்ேடா லூம்ஸ் தறிகளை இயக்க தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு வாரமாக சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி 20 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது.ஜவுளி உற்பத்தி குறைந்துள்ளதால்,உற்பத்தியாளர்களுக்கு அடிக்கு மேல் அடி விழுந்துள்ளது. இவைகள் எல்லாம் சரியாக இன்னும் ஆறு மாதமாகும். அதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள்,விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.

Related Stories: