குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தேங்கும் தண்ணீர்; டவுன் காட்சி மண்டபம் அருகே சகதியில் சிக்கிய அரசு பஸ்: வாகன ஓட்டிகள் குமுறல்

நெல்லை: நெல்லை டவுன் காட்சி மண்டபம் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் இன்று காலை அங்கு அரசு பஸ் சேற்றில் சிக்கி கொண்டது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் சாலையை சமப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும். நெல்லை மாநகர பகுதிகளில் அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை டவுன் காட்சி மண்டபம் தொடங்கி கம்பா நதி காமாட்சி அம்மன் கோயில் வரை சாலையின் நடுவே குழிகள் தோண்டப்பட்டு கடந்த மே 15ம் தேதி முதல் இரு வார காலத்திற்கு பணிகள் நடந்தன.  இதையொட்டி வாகன போக்குவரத்து தச்சை, ராமையன்பட்டி, கண்டியப்பேரி வழியாக திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், டவுன் கம்பாநதி கோயில் சாலையை பெயரளவுக்கு மண் போட்டு சீரமைத்து பஸ்களை இயக்கினர். இந்நிலையில் அங்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த சாலையே தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அங்கு பணிகள் நிறைவு பெறாத நிலையில், அப்பகுதியை கடக்க முயன்ற அரசு பஸ் இன்று சேற்றில் சிக்கி கொண்டது. கம்பாநதி காமாட்சியம்மன் கோயில் முனையில் சிக்கி கொண்ட அரசு பஸ்சால் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பின்னர் பயணிகள் இறங்கி, பஸ் சகதியில் இருந்து வெளியேற உதவினர்.

இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகம்மது அயூப் கூறுகையில், ‘‘நெல்லை டவுனில் இருந்து பேட்டைக்கும், பேட்டையில் இருந்து பஸ்கள் டவுனுக்கு செல்லும் வாகனங்கள், கடந்த இரு தினங்களாக சகதியில் சிக்கி திணறுகின்றன. குடிநீர் குழாய் பதித்த சாலைகளை முழுமையாக சீரமைப்பதோடு, அங்கு தேங்கி நிற்கும் அசுத்தமாக நீரை அகற்றிட வேண்டும். சாலையிலுள்ள மண்ணை அகற்றி, வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: