மத ரீதியாக பகைமை தூண்டுவதாக புகார் ‘காட்மேன்’ தயாரிப்பாளர் இயக்குனர் மீது வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிசத் -தமிழ்நாடு அமைப்பின் சென்னை அமைப்பாளர் சத்தியமூர்த்தி என்பவர் கடந்த வாரம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ‘காட் மேன்’ என்னும் பெயரில் வெப் தொடரை வரும் ஜூன் 12ம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக டீசர் வெளியிட்டுள்ளது. டீசர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ளது.  டீசரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானதாகவும், மத ரீதியாக பகைமையை தூண்டும் விதத்திலும், அதன் மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் காட்சிகள் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டது.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ‘காட் மேன்’ தொடர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அதில் காட்சிப்படுத்தப்பட்ட சில காட்சிகள் இரு சமூகத்திற்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ‘காட் மேன்’ வெப் தொடர் தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், ஆகியோர் மீது இரு சமூகத்திற்கும் இடையே மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர், இயக்குநர் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: