காலண்டர், நோட் புக் அட்டை தயாரிப்பு தொழில் கடும் பாதிப்பு ஆட்டம் காணும் அட்டை கம்பெனிகள்: தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழப்பு

திருமங்கலம்: கொரோனா ஊரடங்கால் காலண்டர் அட்டை மற்றும் நோட்டு புத்தகங்களுக்கு அட்டை தயாரிக்கும்  தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம்,  திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தில் அட்டை தயாரிக்கும்  தொழிற்சாலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து  வருகின்றனர். தினசரி காலண்டர் மற்றும் நோட்டு புத்தகங்களுக்கான அட்டைகள்  தயாரிக்கப்பட்டு அவை மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு  ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. அட்டைகள் தயாரிக்க தேவையான  காகிதக்கூழ் கரூரிலுள்ள தமிழக அரசின் காகித ஆலையிலிருந்து வரவழைக்கப்பட்டு  அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மற்றும்  மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் சீசன் நேரம் என்பதால், பல்லாயிரக்கணக்கான அட்டைகள்  தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். காகிதக்கூழ் உள்ளிட்ட மூலப்பொருள்களை  கலந்து தயாரிக்கப்படும் அட்டைகளை 40 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.  இல்லையெனில் அட்டைகள் மக்கி வீணாகி விடும்.

கொரோனா ஊரடங்கால் ஆலையில் தயாரிக்கப்பட்ட அட்டைகளை  வெளியே அனுப்ப இயலவில்லை.  ஆர்டர்கள் எடுத்தும் பொது போக்குவரத்து இல்லாத  காரணத்தினால் அனுப்ப முடியாத நிலை. இதனால் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தயாரிக்கப்பட்ட  அட்டைகள் பாழாகி விட்டன. இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களும்  வேலையின்றி வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட  பிழைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். ஆலை உரிமையாளர் மாரிமுத்து கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு காரணமாக  தொழிலில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மக்கிப்போன அட்டைகளை மீண்டும் தூளாக்கி அட்டையாக உருவாக்க  இரட்டிப்பு செலவினம் ஏற்படும். தொழிலாளர்களுக்கு ஊதியம்  கொடுக்கக்கூட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.  மின் கட்டணம் செலுத்துவதிலும் பிரச்னை உள்ளது. அரசு சமீபத்தில் அறிவித்த தளர்வுகளை தொடர்ந்து, தற்போது சமூக  இடைவெளி விட்டு பணிகளை துவக்கியுள்ளோம். நஷ்டத்தை ஈடுகட்ட அரசு நிவாரணம்  அறிவித்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: