பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பிழையான கேள்விக்கு 3 ‘மார்க்’: கல்வித் துறை உத்தரவு

சென்னை:  பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதன் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகத்தில் 200 திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை அடுத்து சென்னை மாவட்டத்தில் எங்குமே விடைத்தாள் திருத்தும் பணி நடக்கவில்லை.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 26ம் தேதி விடைக்குறிப்புகள் அச்சிட்டு வழங்கப்பட்டன. அதில் குறிப்பிட்டுள்ள விடைகளை மாணவர்கள் எழுதியிருந்தால் மட்டுமே முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வின்போது, ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்காக மேற்கண்ட இரண்டு வழியிலும் கேள்வித்தாள் அச்சிடப்பட்டதுடன், ஏ, பி என்று இரண்டு பிரிவுகளில் கேள்வித்தாள் அச்சிட்டு வழங்கப்பட்டன.

அதனால் அருகருகே மாணவர்கள் அமர்ந்தாலும், ஏ,பி வரிசைப்படி கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வேதியியல் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 3 மதிப்பெண் கேள்விகளில் ஒரு கேள்வி, ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், தமிழ் வழியில் வேறு மாதிரியாகவும் கேட்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த கேள்வி பிழையான கேள்வி என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த கேள்வியை தமிழ் வழி மாணவர்கள் விடை எழுத முயற்சித்து இருந்தாலே அவர்களுக்கு 3 மதிப்பெண் போனசாக வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டது. இதன்பேரில் அந்த கேள்விக்கு விடை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 3 மதிப்பெண்கள் நேற்று வழங்கப்பட்டன.

Related Stories: