திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது: அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...

திருமலை: திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது என்று அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர்கள் குழு கூட்டம் இன்று திருமலையில் உள்ள அன்னமயப்பவனில் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊரிலேயே இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர்கள் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறுகையில் கடந்த ஒருவாரமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்பனை செய்வதாக வரும் சர்ச்சைகளை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த ஆலோசனையில் பக்தர்கள் நிலங்களாகட்டும் மற்றும் வேறு விதமான முறையில் காணிக்கைகளாக வழங்கிய நகைகள் உள்ளிட்ட அனைத்தையும் எக்காரணத்தை கொண்டும் விற்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் மேலும் கடந்த 2016ம் ஆண்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பயன்படுத்தாத நிலங்கள் என்று கூறி விற்பனை செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவை தற்போது தங்கள் அரசுக்கும், அறங்காவலர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இந்த தீர்மானத்தை புதிதாக யார் கொண்டு வந்தார்கள்? இதன் பின்னணியில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து உரிய விசாரணை நடத்துவதற்காக மாநில அரசுக்கும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விஜயலன்ஸ் விசாரணைக்கு அல்லது தனிநபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அறங்காவலர்கள் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று காத்திருக்கக் கூடிய இந்த நிலையில் தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வைகுண்டம் காத்திருப்பு வழியாக பக்தர்களை அனுமதிக்கும் போது தனிமனித இடைவெளியுடன் செல்வது என அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் தாங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மே 31ம் தேதி ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, விரைவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாநில பிரிவினைக்கு பிறகு குழந்தைகளுக்கான மருத்துவமனை ஏதும் இல்லாததால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில் குழந்தைகள் நல மருத்துவமனையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை எப்படி கையாள்வது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அதில் இருந்து எவ்வாறு மீண்டும் கையகப்படுத்துவது என்பதற்காக பக்தர்கள், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், மடாதிபதிகள் உடன்கூடிய ஒரு தனி கமிட்டியை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கையை பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: