அசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் நகருக்கு அடியில் 1,443 அடி நீளத்தில் சுரங்கப் பாதை அமைப்பு.... மத்தியமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு.!

புதுடெல்லி: போக்குவரத்து அதிகம் இருக்கும் சம்பா நகரத்தில், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்ததற்காக, பி.ஆர்.ஓவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். சார்தாம் திட்டத்தின் கீழ் கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்க, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்தின் கீழ், தேசிய  நெடுஞ்சாலையில், ரிஷிகேஷ் - தராசு இடையே, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா நகரில், சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட சம்பா நகருக்கு அடியில், இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி, கடந்தாண்டு ஜனவரியில் துவங்கியது. வரும், 2021 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான மண் தன்மையால், சம்பா  நகரில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுப்பப்பட்டது. ஒரு சிறிய அதிர்வு கூட இல்லாமல், மிக குறுகிய காலத்தில் இந்த சுரங்கம் அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ திறம்பட செய்துள்ளது. இதனையடுத்து, நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி  மூலம் பங்கேற்று அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நமது எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) குழு, சார்தாம் சாலை திட்டத்தில் ஒரு மிக பெரியச் சாதனையை செய்துள்ளது என்பதை அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன். ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (என்.எச் 94) போக்குவரத்து மிக அதிகம் உள்ள சம்பா நகரில்,  440 மீட்டர்நீளமுள்ள சுரங்கப்பாதையை  தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பி.ஆர்.ஓ செய்த பணி ஒரு அசாதாரணமான சாதனை. அவர்கள்,, உலகஅளவில் தொற்றுநோய் பரவி வரும் இந்த நெருக்கடி நிலையில், தேசத்தை மேம்படுத்த உதவும் இந்த அசாதாரணமான சாதனையை புரிந்ததற்காக பி.ஆர்.ஓ குழுவினரை  வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த சுரங்கப்பாதை, போக்குவரத்தை எளிதாக்குவதோடு, சம்பா நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சார்தாம் யாத்திரை செல்பவர்களின் பயணத்தை எளிதாக்கவும் பொருளாதார  மேம்பாட்டிற்கும் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். வரும், அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து விடப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: