தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்?: அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை...!

சென்னை: மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும்,  வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. இருப்பினும், கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, சர்வதேச விமான சேவைக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம்  வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழலில்  பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிசெய்யும் விதமாக, கடந்த 24-ம் தேதி  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை  தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம், திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது  என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் பள்ளி திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டியளிப்பார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: