வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி பதிவு முதல் 42 டிகிரி பாரன்ஹீட் வரை உயர்ந்து அனல்காற்று வீசும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: