நிபந்தனை விதிக்கப்பட்டும் ஆட்டோக்கள் ஓடவில்லை

திருவள்ளூர்: சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆட்டோக்கள் இயக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் ஆட்டோக்களை இயக்க நிபந்தனை விதிக்கப்பட்டது. எனினும், திருவள்ளூரில் ஆட்டோ போக்குவரத்து தொடங்கவில்லை. வழக்கம்போல், ஆட்டோ தொழில் முடங்கி அனுமதிக்கு முந்தைய நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு ஒரு பயணியுடன் மட்டும் இயக்க அனுமதி அளித்ததே காரணமென ஆட்டோ டிரைவர்கள் புலம்புகின்றனர். மேலும், மாவட்டத்தில் ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள் தங்கள் சுய தேவைக்கு மட்டுமே ஆட்டோக்களை ஓட்டினர்.

இதுகுறித்து, ஆட்டோ தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 8000 ஆட்டோக்கள் உள்ளன. அரசு அனுமதி அளித்தும், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. அவசரத்துக்கு நோயாளியை அழைத்து சென்றால் கூட உதவிக்கு ஒருவர் தேவை. நிலைமை இப்படி இருக்கும்போது, ஒருவரை மட்டும் அழைத்துச்செல்ல அனுமதித்திருப்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குறைந்தது மூவரை அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். மற்றபடி, முகக்கவசம், கிருமிநாசினி சகிதமாக, விதிமுறைகளை பின்பற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தயாராக உள்ளனர் என்றார்.  

Related Stories: