இந்தியாவில் எவ்வளவுதான் முயன்றாலும் தடுப்பூசி கண்டுபிடிப்பது ஓராண்டுக்கு பகல் கனவு

புதுடெல்லி: ‘இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பது ஒரு ஆண்டுக்குள் சாத்தியமில்லை,’ என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க, உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் போட்டிப் போட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்திய விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக பிரதமரின் நன்கொடை திட்டமான ‘பிஎம் கேர்ஸ்’ நிதி அறக்கட்டளையில் இருந்து 100 கோடி ஒதுக்கப்பட உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் ஜைடஸ் காடிலா நிறுவனம்,  சீரம் நிறுவனம், பயாலஜிகல் இ, பாரத் பயோடெக், இண்டியன் இம்முனோலாஜிகல் மற்றும் மையின்வாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.  இது தொடர்பாக வைரஸ் நிபுணரான ஷாகித் ஜமீல் கூறுகையில், “இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடக்க நிலையில்தான் உள்ளது.

எந்த நிறுவனமாக இருந்தாலும்,  விலங்குகளிடம் சோதனை செய்யும் கட்டத்தை எட்டுவதற்கே இந்தாண்டு கடைசியாகி விடும். இந்திய மருந்து நிறுவனங்கள் அதிக திறன் பெற்றவை. அவை கோவிட்- 19 தொற்றுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றும்,” என்றார்.சிஎஸ்ஐஆர் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், “ தடுப்பூசி மேம்பாட்டுக்கான செயல்முறையை பல்வேறு நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் மனிதரிடம் சோதனை செய்யும் நிலைக்கு வரவில்லை,” என்றார். இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த அதிகாரி கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், விலங்குகளிடம் சோதனை செய்த பின்னர் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் மனிதருக்கான மருத்துவ சோதனை தொடரும். ஆனால், ஒரு ஆண்டுக்குள் இது சாத்தியமில்லை,” என்றார்.

Related Stories: