2019-20ம் நிதியாண்டு கணக்கை டிசம்பருக்குள் முடிக்காவிட்டால் தணிக்கை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

* நிதி தணிக்கைத்துறை இயக்குனர் உத்தரவால் அதிர்ச்சி

* மார்ச் மாதத்திலேயே கொரோனா விவகாரத்தால் அரசு அலுவலகங்கள் இயங்காததால், மார்ச் மாத கணக்கையே சம்பந்தப்பட்ட துறையினர் முடிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்

சென்னை: 2019-20ம் நிதியாண்டு கணக்கை வரும் டிசம்பருக்குள் முடிக்காவிட்டால் தணிக்கை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதால் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையானது, உள்ளாட்சி அமைப்புகளின் திட்டங்கள், வரி வருவாய் இனங்களின் வரவு செலவு மற்றும் நிர்வாகங்களை தணிக்கை செய்து அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் அந்தந்த நிதியாண்டு கணக்கு முடிந்தாலும், குறிப்பிட்ட அந்த நிதியாண்டின் முழு தணிக்கையையும் அதே ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது விதிமுறை.

இதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் கிரேடுகள் பிரிக்கப்பட்டு ‘மேன்டேஸ்’ (அனுமதிக்கப்பட்ட மனித நாட்கள்) ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி நகராட்சிக்கு செலக்‌ஷன் கிரேடுக்கு 225 நாட்கள், கிரேடு - 1 (200 நாட்கள்), கிரேடு - 2 (125 நாட்கள்), கிரேடு - 3 (100 நாட்கள்), பேரூராட்சிகளுக்கு ஸ்பெஷல் கிரேடுக்கு 100 நாட்கள், செலக்‌ஷன் கிரேடு (60 நாட்கள்), கிரேடு - 1 (30 நாட்கள்), கிரேடு - 2 (20 நாட்கள்), ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்த வரவு - செலவினங்களின் அடிப்படையில் நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தணிக்கை நடைெபறும். இதற்கிடையே மாநில உள்ளாட்சி தணிக்கை துறை இயக்குனர் தரப்பில், அனைத்து மண்டல இணை இயக்குனர், பெருநகர சென்னை மாநகராட்சி இணை இயக்குனர், பல்கலைக்கழகங்களின் துணை இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘உள்ளாட்சி நிதித் தணிக்கை சட்டத்தின்படி நிதியாண்டு முடிவடையும் காலத்தில் இருந்து 3 மாதத்திற்குள் (ஜூன்) ஆண்டு கணக்கை தயாரித்து தணிக்கைக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு தயாரித்து அனுப்பப்பட்ட தணிக்கையை 6 மாத காலத்திற்குள் (டிசம்பர்) முடிக்க வேண்டும். எனவே, 2019-20ம் நிதியாண்டுக்கான அனைத்து நிறுவனங்களின் தணிக்கையை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு தணிக்கையை முடிக்காத அலுவலக தலைவர்கள் மீது உரிய விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை துறை இயக்குனர் கூறியபடி மார்ச் முடிந்து ஜூன் மாதத்திற்குள் தணிக்கைக்கு உள்ளாட்சி அமைப்புகள் கணக்கை அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது ஒரு மாதம்தான் இடைவெளி உள்ளது. இந்த காலகட்டத்தில் ஓராண்டின் கணக்கும் அவசர அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மார்ச் மாதத்திலேயே கொரோனா விவகாரத்தால் அரசு அலுவலகங்கள் இயங்காததால், மார்ச் மாத கணக்கையே சம்பந்தப்பட்ட துறையினர் முடிக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

இந்த கணக்கெல்லாம் அவசரகதியில் முடித்து, தணிக்கை துறைக்கு ஜூனுக்குள் அனுப்பியாக வேண்டும் என்று கூறப்படுவதால், வரவு-செலவுகளில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிவதில் சிரமம் ஏற்படும் என்றும், இது தணிக்கை துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று தணிக்கை துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: