கொரோனா ஊரடங்கால் தேவை குறைவு செடியிலே வீணாகும் கோழிக்கொண்டை பூக்கள்

பெரியகுளம்: கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள், விஷேசங்கள் நடக்காமல் தேவை குறைந்ததால், கோழிக்கொண்டை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், சங்கரமுர்த்திபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கோழிக்கொண்டை பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த ஒரு மாதம் முதல் விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவர்.

ஏப்ரல், மே மாதங்களில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடப்பதால், பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கோயில்கள் பூட்டப்பட்டு திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணங்களும் அரசு நிபந்தனைகளுடன் வீட்டிலேயே எளிய முறையில் நடந்து வருகிறது. இதனால், கோழிக்கொண்டை பூக்களின் தேவை குறைந்து, விலையும் குறைந்துள்ளது. விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பூக்களுக்கு நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: